கலித்தொகை – என் பார்வையில்

November 2, 2013

கலித்தொகை என் பார்வையில்

கலித்தொகை சங்க இலக்கியத்தில ஒன்று. இன்றைய கால கட்டத்திலே மேம்போக்காக படிக்கும் போது இதன் சுவையும், தகவல் களஞ்சியமும் நமக்கு தெரிவதில்லை. இதை கற்றறிந்தார் ஏத்தும் கலிஎன வழங்குவர். இந்த இலக்கியத்தை கற்று அறிந்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்பது உண்மை.

முல்லை பதிப்பகத்தின் கலித்தொகை நச்சினார்கினியர் உரையுடன்படித்த பின்பு கலித்தொகை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆயினும் முழுமையாக புரியவில்லை. மேலும் இருமுறை படித்தபின்பு இது ஏன் கற்றறிந்தார் ஏத்தும் கலிஎன்பது விளக்கியது.

கலித்தொகை மிகவும் இயல்பாக – யதார்தமாக எழுதப்பட்ட ஒன்று. நம் மனதை சுமார் 1700 ஆண்டுகள் முன்னர் இருந்த வாழ்க்கைமுறைக்குக்கு அழைத்து செல்கிறது. பரந்து விரிந்த பாரத பண்பாடு என்பதில் தமிழகமும் ஓர் அங்கமே என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.

கலித்தொகையில் பல புராண இதிகாச குறிப்புகள் வருகின்றன. அந்தணர் பற்றி பல குறிப்புகள், இமயத்தை பற்றி, கிரகணத்தை பற்றி என பல சுவையான தகவல்கள் காணலாம். இதில் தத்துவமும் இருக்கிறது, காதலும் இருக்கிறது, நயமான பாடலும் நக்கலான பாடலும் இருக்கிறது.

என் பார்வையில் சுவையான/நயமான/முக்கியமான வற்றை பற்றிய தொகுப்பில் முதல் பதிவு இது.

1.கலித்தொகையில்ரோபோ பெண்

தலைவன் தலைவியை பிரிகிறான். தலைவி வருத்தமுறுகிறாள். அவளை காமநோய் வாட்டுகிறது. எல்லா மழையும் அவள் மேல் பெய்தாலும் அந்நோய் ஆறுவதில்லை. நோய் தணிவதற்காக உலகத்து நீரை அவளிடத்தே நிறையும்படி வைத்து அவளை காக்க வேண்டுகிறாள். வருத்தமுற்ற அவளின் நிலையை கூறும் போது


பாடல் 146

வரிகள் 47-50

வருத்துறும் யாக்கை, வருந்துதல் ஆற்றேன்;
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்திப்
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச்
செல்வேன், விழுமம் உழந்து

பொருள்

என்னெஞ்சு வருத்துதலை ஆற்றேனாய்ப் பலவுறுப்புக்களையுங் கூட்டி இயங்குவதோர் பொறியாகச் செய்த புனைந்த பாவைபோல இடும்பையிலே அழுந்தி மயங்கிய யாக்கையோடே சிறிது செல்வேன்.


இதில் முக்கியமாக நோக்க வேண்டியது பலவுறுப்புகளை கூட்டி. ஆக புலவர் நல்லுருத்திரனார் மனதில் இன்றைய ரோபோ போன்ற ஒன்று தோன்றியிருக்க வேண்டும். அதற்கு பல உறுப்புகள் (parts) இருந்திருக்க வேண்டும். அது ஒரு பொறி( machine) என்பதால் மயங்கிய அதாவது சிந்தனை இல்லாத ஒன்றாக இருந்திருக்கிறது. சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன் இந்த கற்பனை மிக அரிதாகும்.

Advertisements