கலித்தொகை – என் பார்வையில் -5

May 11, 2014

5.கலித்தொகையில் புராண இதிகாச குறிப்புகள் -தொடர்ச்சி

முருகன் சூரபத்மனை கொன்ற வரலாறு கூறுதல்

பாடல் 27 வரிகள் 15-16

ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற

வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்?

பகைவரை மாயஞ்செய்து கொல்லாது வென்று கொல்லும் பரக்குங் கடலிடத்து எய்தா நின்ற மாமரத்தைதடித்த வென்வேலையுடைய முருகன்  திருபரங்குன்றின்மேற் பரத்தையருடன் விளையாடும் விளையாட்டையும் விரும்புவாரோ?

 

இராவணன் கையிலாயத்தை தன் கைகளாலே பெயர்க்க முனைந்த கதை.

பாடல் 38 வரிகள் 1 5

 

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல

இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்த கங்கையான் ஈரத்தையுடைத்தாகிய சடையினையுடைய இறைவன் இறைவியோடு பொருந்தி உயர்ந்த கயிலைமலையிலே இருந்தானாக அரக்கர்க்கு அரசன் ஆகிய பத்துத் தலையையுடைய இராவணன் வரையெடுத்ற்குக் கையைக் கீழே செருகித் தொடிபொலிவுபெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுத்தலாற்றாது வருந்துகின்றவனைப்போல

பிரமன்
படைத்தல் தொழில் தெய்வமாகிய பிரமனை முதியவன் என குறிக்கிறது கலித்தொகை. தேவர்கள் இரத்தலின் பொருட்டு முக்கண்ணையுடைய சிவன் அவுணருடைய (அசுரகள் ???) முப்புரத்தை எரித்தான் எணும் புராணக் குறிப்பு உள்ளது. தலைவியை பிரிந்து பொருள் தேடச் சென்ற தலைவன் செல்லும் வழியின் வெம்மையின் கடுமை, வெப்பத்தால் அழியும் முப்புரம் போன்றது.

பாடல் 2 வரிகள் 2 – 10

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக, 
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், 
மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக் 
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும் 
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின் 
சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில் 
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் 
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை – 
மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய, 
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐய! 

அருந்ததி

இதே பாடல் வரிகள் 22 –23. இவ் வரிகளில் தலைவியின் கற்பு வடமீனாகிய அருந்ததியின் கற்பு போன்றது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அருந்ததி பற்றிய புராணம் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்ததை நன்கு அறியலாம்

வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் 
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை; 

மகாபாரதம்

மகாபாரத நிகழ்வுகள் பற்றி பல குறிப்புகளை கலித்தொகையில் காணலாம்

மகாபாரதத்தில் துரியோதனன் சூழ்ச்சியாலே அரக்கு மாளிகையை எரித்து பாண்டவர்களை கொல்ல முயன்றதை 25வது பாடலில் கூறப்பட்டுள்ளது. மேலும் திருதிராஷ்டிரனை ‘வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன்’ எனவும் குறிப்பிடுகிறது.

பாடல் 25 வரிகள் 1-5

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,

பொருள்
வடமொழிப் பெயர்பெற்ற வயக்கறு மண்டிலம்போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே ஐவரென்று உலகத்தார் புகழும் தன்மபுத்திரர் முதலியோர் உள்ளேயாகக் கையாலே புனையப்பட்ட அரக்கு மாளிகையை விரைந்து நெருப்பு சூழ்ந்தாற் போலக் களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிகள் உள்ளேயாக.

பாடல் 52 வரிகள் 1 3
நூற்றுவர் தலைவனை துரியோதனனை பீமன் வெல்வதை குறிக்கிறது

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்

பொருள்
முறம் போலுஞ் செவியாகிய மறைப்பிமாக வந்து பாய்ந்து மாறுபாடு செய்த புலியைக் கோபித்து மறத்தைத் தம்மிடத்தே கொண்ட நூற்றுவர்குத் தலைவனாகிய துரியோதனனைக் குறங்கில் உயிரை போக்குகின்ற பீமசேனனை போல் ……..

பாடல் 101 வரிகள் 15 – 20
பீமன் துரியோதனனின் மார்பை பிளந்து ரத்தம் குடித்தல்

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்-
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!
பொருள்
உயர்ந்த கொம்பிடத்தே வைத்த உலண்டினது நிறத்தையொக்கும் புல்லிய நிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய் அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக்குலைக்கின்றதனுடைய தோற்றரவைக் காணாய்; அழகிய தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்துபோகட்டுப் பகைவர்நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனைப்போலும்

அசுவத்தாமா சிகண்டியை கொன்றது
பாடல் 101 வரிகள் 30 – 32

ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்!

பொருள்
வருதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானாய் வந்து துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலேவென்று கொன்று தன் தோளால் தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப்போலும்

பாடல் 104 வரிகள் 56 – 59

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ.

பொருள்
போரைவிரும்பி மேலே சென்று துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன்முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும்

 


 


Advertisements